செய்திகள்
கோப்பு படம்

தவறான சிகிச்சையால் லாரி உரிமையாளர் பலி - உறவினர்கள் போராட்டம்

Published On 2020-01-29 10:15 GMT   |   Update On 2020-01-29 10:15 GMT
தண்டையார்பேட்டையில் உள்ள ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சையால் லாரி உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:

புதுவண்ணாரப்பேட்டை திருவள்ளூர் குடியிருப்பில் வசித்து வருபவர் சேகர் (47). அதே பகுதியில் லாரிகள் வைத்து டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருக்கு நீலாவதி என்ற மனைவியும் ஹேமராஜ், யுவராஜ் என்கிற 2 மகன்களும் உள்ளனர்.கடந்த ஒரு மாதமாக சேகர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இதையடுத்து தண்டையார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேகரை சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் சிறுநீரகத்தில் கல் இருப்பதாகவும் அதை கதிர்வீச்சு அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது

இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சேகருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அறுவைச் சிகிச்சை செய்ய தொடங்குவதற்கு முன்பே சேகர் உயிர் இழந்ததாக மருத்துவர்கள் சேகரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சேகரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சேகர் உயிரிழந்ததாக கூறி ஆஸ்பத்திரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தண்டையார்பேட்டை போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். மேலும் சேகரின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சேகருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News