செய்திகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

குரூப்-2 தேர்விலும் முறைகேடா?

Published On 2020-01-29 08:58 GMT   |   Update On 2020-01-29 08:58 GMT
2017-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. அந்த தேர்விலும் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 37 பேர் முதல் 100 இடத்துக்குள் வந்ததாக தெரிய வந்துள்ளது.
சென்னை:

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணம் கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டதோடு அவர்கள் வாழ்நாள் முழுவதும் அரசு தேர்வு எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முறைகேட்டில் ஈடுபட்டதாக பள்ளிக்கல்வித்துறை உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் திருக்குமரன் (35), தேர்வாணைய ஆவண காப்பக கிளார்க் ஓம்காந்தன், இடைத்தரகர்கள், ஆவடி வெங்கட்ரமணன், தேனி பாலசுந்தரராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்து முதல் 100 இடங்களுக்குள் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டவர்களில் ராமநாதபுரம் வேல்முருகன், கடலூர் ராஜசேகர், சீனிவாசன், ஆவடி சாலேஷா, திருவல்லிக்கேணி நிதீஷ்குமார், ராணிப்பேட்டை கார்த்தி, திருவள்ளூர் வினோத்குமார் ஆகிய 12 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை நடத்திய விசாரணையில் சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் பல ஆண்டுகளாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. அவர் கைதானால் பல உண்மைகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில பயிற்சி மையங்கள் ஜெயக்குமார் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, “ஜெயக்குமாரிடம் விசாரித்தால்தான் இதை உறுதி செய்ய முடியும்” என்றனர்.

இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து விசாரித்தார்கள். சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது முறைகேடு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு அவர்களிடம் விளக்கம் கேட்டனர்.

அப்போது டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தங்களிடம் இருந்த சில ஆதாரங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இடைத்தரகர்கள் அதிகாரிகள் துணையில்லாமல் இந்த முறைகேட்டை செய்திருக்க முடியாது என்று சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள ஓம்காந்தனின் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தபோது சில உயர் அதிகாரிகளின் போன் நம்பர்களும், அந்த எண்களுடன் பலமுறை தொடர்பு கொண்டு பேசியதும் தெரிய வந்தது. எனவே உயர் அதிகாரிகளும் விசாரணை வளையத்துக்குள் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில் 2017-ம் ஆண்டு உயர் பதவிகளுக்கான குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. அந்த தேர்விலும் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 37 பேர் முதல் 100 இடத்துக்குள் வந்ததாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் அரசின் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகிறார்கள்.

2017-ல் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களின் பெயர் விபரங்களையும் போலீசார் சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News