செய்திகள்
சாத்தனூர் அணை

போதிய மழை இல்லாததால் 100 அடியை எட்ட முடியாமல் திணறும் சாத்தனூர் அணை

Published On 2020-01-08 10:46 GMT   |   Update On 2020-01-08 10:46 GMT
தென்மேற்கு பருவமழை மற்றும் வட கிழக்கு பருவமழையானது போதியளவு பெய்யாததால் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை முழுவதுமாக நிரம்பவில்லை.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்ட விவசாயிகளின் தாகத்தை தணிக்கும் சாத்தனூர் அணையின் நீர் மட்டம் 119 அடியாகும்.

பருவமழை பொய்த்த காரணத்தால், அணையின் நீர் மட்டம் நேற்று காலை நிலவரப்படி 97.75 அடியாக உள்ளது. 7,321 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட அணையில், 3,434 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சாத்தனூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டினால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். தற்போதுள்ள சூழ்நிலையில் அணையில் உள்ள நீரின் பெரும்பகுதி குடிநீர் திட்டம் மற்றும் மின்சார உற்பத்தி போன்ற பயன்பாட்டுக்கு சென்றுவிடும். சொற்ப அளவில் மட்டுமே விவசாய பாசனத்துக்கு நீர் கிடைக்கும். சாத்தனூர் அணை நிரம்பாததால் தென் பெண்ணையாறு வறண்டு கிடக்கிறது.

கடந்த 22 மாதங்களாக, அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டவில்லை. கிருஷ்ணகிரி அணையின் மதகு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடைந்ததால், வெளியேறிய நீர் மூலம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து இருந்தது.

இப்போதைய நீர்மட்டம் 97.75 அடியாகும். அதிலும், சுமார் 35 அடி உயரத்துக்கு கழிவு தேங்கிக்கிடக்கிறது. சாத்தனூர் அணை திறக்கப்பட்டால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் பயன்பெறும்.

திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் செழிக்கும் என்றனர்.
Tags:    

Similar News