செய்திகள்
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் செலவு கணக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Published On 2020-01-07 03:08 GMT   |   Update On 2020-01-07 03:08 GMT
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள் 30 நாட்களுக்குள் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தேர்தலில் செலவிடப்பட்ட தொகைக்கான கணக்கினை முறைப்படி உரிய படிவத்தில் பராமரிக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு பராமரிக்கப்பட்ட கணக்கு நகலை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் மாவட்ட ஊராட்சி செயலாளரிடமும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய ஆணையரிடமும், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் (வட்டார ஊராட்சி) / ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் தேர்தல் செலவு கணக்கு விவரத்தினை தாக்கல் செய்ய வேண்டும். வேட்பாளர்கள், தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்தமைக்கான ஒப்புதலை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994, பிரிவு 37(4)ன்படி தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வருங்காலங்களில் உள்ளாட்சி தேர்தல்களில் மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்.
Tags:    

Similar News