செய்திகள்
விபத்துக்குள்ளான பஸ்ஸின் முன் பகுதி நொறுங்கி உள்ள காட்சி

கல்லூரி பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 18 மாணவ-மாணவிகள் படுகாயம்

Published On 2020-01-06 07:30 GMT   |   Update On 2020-01-06 07:30 GMT
ராஜாக்கமங்கலத்தில் கல்லூரி பஸ்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 18 மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலத்தில் இருந்து வெள்ளிச்சந்தை நோக்கி ஒரு தனியார் கல்லூரி பஸ் சென்று கொண்டிருந்தது.

அந்த பஸ் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள சூரப்பள்ளம் என்ற இடத்தில் இன்று காலை 8.30 மணி அளவில் சென்றபோது எதிரே பேயோட்டில் இருந்து மற்றொரு தனியார் கல்லூரி பஸ் வந்துகொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக இந்த 2 கல்லூரி பஸ்களும் மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான கல்லூரி பஸ்களில் ஏராளமான மாணவ, மாணவிகளும், ஆசிரியைகளும் இருந்தனர். விபத்து நடந்ததும் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் பயத்தில் அலறினார்கள். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் காலை நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் அங்கு பொதுமக்கள் கூடி பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்து பற்றி ராஜாக்கமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுக் கப்பட்டது.

மேலும் விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்கும் பணியிலும் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

விபத்துக்குள்ளான 2 பஸ்களிலும் பயணம் செய்த மாணவ, மாணவிகள் அனுஅக்‌ஷயா, சாலினி, அஸ்மின், திவ்யா, அஜிஸ்மா, லிபிஷா, சுஷ்மா, அபிஷா, சஜிதா, அஸ்லின்ஸ்டெபி, மற்றொரு அபிஷா, ராம் பிரபு, சிஜித், ராதுரவி, அபினேஷ், ரஜின்குமார், விஜினின்ஷா, ஜெரிஷ் ஆகிய 18 பேரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும் ஆசிரியை பிரீடா, பஸ் டிரைவர் தென்தாமரைகுளத்தை சேர்ந்த ராஜன் ஆகியோருக்கும் படுகாயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் சாலையோரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிலும் பஸ்கள் மோதியதில் பலத்த சேதம் அடைந்தது. விபத்து காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று போக்குவரத்து நெருக்கடியை சீரமைத்தனர்.

மேலும் இந்த விபத்து பற்றி ராஜாக்கமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags:    

Similar News