செய்திகள்
மறு வாக்கு எண்ணிக்கை கோரி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி உறவினர்களுடன் வேட்பாளர் மறியல்-தற்கொலை முயற்சி

Published On 2020-01-03 09:52 GMT   |   Update On 2020-01-03 09:52 GMT
பெரம்பலூர் அருகே இன்று மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி உறவினர்களுடன் வேட்பாளர் மறியல் மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடாலூர்:

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மருத முத்து, தொண்டப்பாடியைச் சேர்ந்த பழனிவேல் ஆகியோர் போட்டியிட்டனர்.

நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் மருத முத்து அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பழனிவேல், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. கீழ உசேன்நகர் பகுதியில் உள்ள வாக்குகளை எண்ண வில்லை. அங்கு எனக்கு 170 வாக்குகள் உள்ளது. எனவே மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டார்.

இந்த நிலையில் இன்று காலை பழனிவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள் அல்லிநகரம் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே மறியலில் ஈடுபட்ட பழனிவேல் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் திடீரென உடலில் மண் எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே அங்கு நின்ற பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News