செய்திகள்
போலி டாக்டர்கள்

அதிகரிக்கும் மழைக்கால நோய்கள் - மீண்டும் தலைதூக்கும் போலி டாக்டர்கள்

Published On 2019-12-28 10:00 GMT   |   Update On 2019-12-28 10:00 GMT
மழைக்கால நோய்கள் அதிகரித்து வருவதால் போலி டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் மழை நின்ற பிறகு கடுமையான பனிப்பொழிவு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் பலவித நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். காய்ச்சல், சளி, இருமல் போன்றவை அதிகம் தாக்கப்படும் நோய்களாக உள்ளது.

இவற்றுக்கு அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாத்திரைகள் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த மாத்திரைகளை தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு சாப்பிட்ட பின் காய்ச்சலின் தீவிரம் குறையாவிட்டால் ரத்த மாதிரி எடுத்து அவர்களுக்கு அதற்குரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு ஊசி, மருந்து மாத்திரைகள் கொடுக்க கூடாது என கண்டிப்பாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே பெரும்பாலானோர் அரசு ஆஸ்பத்திரியை நாடியே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் காய்ச்சல் பல நாட்கள் நீடிப்பதால் அவர்கள் தனியார் ஆஸ்பத்திரியை நோக்கி செல்கின்றனர். மறைமுகமாக அவர்களுக்கு ஊசி, மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறது.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நர்சிங் படிப்பு முடித்தவர்களும், எம்.பி.பி.எஸ். முடிக்காதவர்களும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் மருந்து கடைகளிலும் ஊசி போடப்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகளின் காய்ச்சல் குணமாகி விடுவதாலும் குறைந்த அளவே பணம் வாங்கப்படுவதாலும் மக்கள் வெளியில் யாரிடமும் புகார் தெரிவிப்பதில்லை. ஆனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு நோயாளி பாதிக்கப்படும்போதுதான் பிரச்சினை பெரிதாக வெடிக்கும்.

எனவே திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலி டாக்டர்களின் நடமாட்டத்தை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News