செய்திகள்
விபத்து

நுங்கம்பாக்கத்தில் போதையில் காரை ஓட்டி காவலாளி உயிரை பறித்த 5 இளைஞர்கள்

Published On 2019-12-27 09:46 GMT   |   Update On 2019-12-27 09:46 GMT
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று அதிகாலையில் 5 இளைஞர்கள் போதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளானதில் காவலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:

நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள குடிநீர் வாரிய அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் மன்னார்சாமி (50).

இவர் இன்று காலை 5.30 மணி அளவில் குடிநீர் வாரிய அலுவலகத்தில் இருந்து டீ குடிப்பதற்காக கோடம்பாக்கம் தென் சாலைக்கு வந்தார். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் தாறுமாறாக ஓடியது. சாலையோரமாக மரத்தில் மோதிய கார் நடந்து சென்ற மன்னார்சாமி மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கு கூடினார்கள். காரை முற்றுகையிட்டு காரில் வந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காரில் இருந்து இறங்கிய 5 இளைஞர்களும் போதையில் கலாட்டா செய்தனர். அதில் ஒருவர் காரில் இருந்து பெரிய இரும்பு கம்பியை எடுத்து வீசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் 5 பேரையும் பிடித்து வைத்து கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

காரை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரது பெயர் பூனம் கிரன்ராஜா (23) அரும்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான மன்னார்சாமியின் சொந்த ஊர் வேலூர் கண்ணமங்கலம் அருகே உள்ள களம்பூர் கிராம் ஆகும்.

சென்னையில் வெவ்வேறு விபத்துக்களில் மேலும் 2 பேர் பலியானார்கள்.

கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் சபரி (23). இவரது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபாளையம். அவர் உறவினர் வீட்டில் தங்கி பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.

இன்று அதிகாலை சபரி வீட்டில் இருந்து வெளியே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார்.

குன்றத்தூர், சிங்கராயபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார், இவரது மகன் சிபு (23). நேற்று இரவு அம்பத்தூரில் உள்ள நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றார். அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் அருகே சென்ற போது அந்த வழியாக தறிகெட்டு ஓடிய வேன் சிபுவின் மோட்டார் சைக்கிளில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிபு பலியானார். வேன் டிரைவர் சிவக்குமாரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News