செய்திகள்
கைது

கழுகுமலையில் மருத்துவமனையில் புகுந்து ஊழியரை தாக்கிய ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி கைது

Published On 2019-12-26 11:44 GMT   |   Update On 2019-12-26 11:44 GMT
கழுகுமலையில் மருத்துவமனையில் புகுந்து ஊழியரை தாக்கிய ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.
கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள பழங்கோட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 64). ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான இவரது மகன் பாலாஜிக்கு காலில் வீக்கம் ஏற்பட்டு கடந்த 20-ந் தேதி கழுகுமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். இதையடுத்து மகனுக்கு துணையாக மருத்துவமனையில் அவரது தாய், மாரியம்மள் (55) உடன் இருந்து கவனித்து வந்துள்ளார்.

இதில் மாரியம்மாளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. பின்னர் அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கோவில்பட்டியில் உள்ள அதே மருத்துவமனைக்கு சொந்தமான ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சிகிச்சை பலனின்றி கடந்த 21 -ந் தேதி மாரியம்மாள் இறந்தார். பின்னர் அவரது உடலை அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டு சென்று விட்டு அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலை இறந்த மாரியம்மாளின் கணவரான நடராஜன் கழுகுமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று தவறான சிகிச்சையால் தான் தனது மனைவி இறந்துள்ளார் என்றும் , டாக்டரை பற்றி அவதூறாகவும் பேசி தகராறு செய்துள்ளார். மேலும் மருத்துவமனை ஊழியர் ஏகாம்பரமூர்த்தி என்பவரையும் நடராஜன் தாக்கி, பெண் நர்ஸ் ஊழியர்களையும் தாக்க முயன்றுள்ளார். இது குறித்து ஏகாம்பரமூர்த்தி கழுகுமலை போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான நடராஜனை கைது செய்தார்.

Tags:    

Similar News