செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட ஜேக்கப் மற்றும் ப.சிதம்பரம்

போராடிய ஜெர்மனி மாணவருக்கு நாம் நன்றிக் கடன்பட்டவர்கள் - ப.சிதம்பரம்

Published On 2019-12-24 16:38 GMT   |   Update On 2019-12-24 16:38 GMT
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக போராடிய ஜெர்மனி நாட்டை சேர்ந்த மாணவர் ஜேக்கப்பிற்கு நாம் நன்றிக்கடன்பட்டவர்கள் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ஜெர்மனி நாட்டை சேர்ந்த மாணவர் ஜேக்கப் லின் டென்தல். இவர் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்தில் இயற்பியல் துறையில் படித்து வந்தார். இதற்கிடையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐ.ஐ.டி. மாணவர்களும் நடத்திய போராட்டத்தில் ஜேக்கப்பும் கலந்து கொண்டார்.

அதில் 1933 முதல் 1945 வரை நாஜி ஜெர்மனியில் நடந்த சித்ரவதையை எடுத்துக் காட்டி இந்தியாவிலும் அதைப்போல் நடப்பதாக சித்தரித்து பதாகையையும், எதிர்ப்பு இல்லாமல் சுதந்திரம் இல்லை என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளையும் ஏந்தி ஜேக்கப் ஏந்தி வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து குடியேற்றத்துறை அதிகாரிகள் ஜேக்கப்பிடம் விசாரணை நடத்தினார்கள். அதில் நாட்டின் விசா விதிகளை மீறியதாக கூறி அவரது குடியேற்ற உரிமையை ரத்து செய்தனர். மேலும், ஜேக்கப்பை அவரது சொந்த நாடான ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 



இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது:- 

''உலக வரலாற்றின் இருண்ட அத்தியாயத்தை ஜெர்மனி நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆகையால் அதை நாம் மீண்டும் இந்தியாவில் செய்யக்கூடாது. ஜெர்மனி மாணவருக்கு நாம் நன்றிக்கடன்பட்டவர்கள். 

ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தின் இயக்குனர் எங்கே? அதன் தலைவர் எங்கே? அவர்கள் இருவரும் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம்.

ஐ.ஐ.டி-யில் பயிலும் மற்ற மாணவர்கள் எங்கே? ஜெர்மனி மாணவன் வெளியேற்றப்பட்டதற்கு எதிராக அவர்கள் போராட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News