செய்திகள்
கோப்பு படம்

காரமடையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறப்பு

Published On 2019-12-23 10:52 GMT   |   Update On 2019-12-23 10:52 GMT
காரமடையில் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரமடை:

காரமடை அருகே ரங்கநாதபுரம், பெரியார் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

மேலும் பள்ளி மற்றும் கோவில்களும் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் மிகுந்த பாதிப்படைந்தனர். பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து அந்த கடை அகற்றப்பட்டது. இந்த நிலையில் அகற்றப்பட்ட அந்த கடை மீண்டும் அதே பகுதியில் நேற்று திறக்கப்பட்டது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து கடையை திறக்க கூடாது என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்த காரமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த பகுதி குடியிருப்பு நிறைந்த பகுதி. மேலும் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

இங்கு மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதால் குடித்து விட்டு வரும் குடிமகன்களால் இந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது. அப்படி திறந்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர். இதையடுத்து போலீசார் இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளிடம் மனு அளியுங்கள் என்று கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News