செய்திகள்
மர்மமான முறையில் இறந்த கைதி முருகன்

திருச்சி அருகே விசாரணை கைதி மரணம் - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு

Published On 2019-12-17 11:41 GMT   |   Update On 2019-12-17 11:41 GMT
திருச்சி அருகே விசாரணை கைது மர்மமான முறையில் மரணமடைந்ததையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேரை சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
திருச்சி:

திருச்சி சமயபுரம் போலீசார் பழைய பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருச்சி இ.பி. ரோட்டை சேர்ந்த முருகன் (வயது 50), அவரது மகன் வீரபாண்டி (33), உறவினர் சுப்பிரமணி, பாலா ஆகிய 4 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வழிப்பறி வழக்கு தொடர்பாக முருகனை போலீசார் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது முருகன் மர்மமான முறையில் இறந்தார். போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியபோது, மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் முருகனின் உறவினர்கள் போலீசார் தாக்கியதில் இறந்ததாக புகார் தெரிவித்தனர்.

முருகனின் மகன் வீரபாண்டி கூறும்போது, எனது தந்தையை சமயபுரத்தில் உள்ள ஒரு விடுதிக்கு தனியாக போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தாக்கியதில் எனது தந்தை இறந்ததாக தெரிவித்தார். எனவே இதற்கு காரணமான போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதனிடையே முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு குவிந்த முருகனின் உறவினர்கள் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் முருகனின் உடலை வாங்கவும் மறுத்தனர்.

சம்பவ இடத்திற்கு திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், எஸ்.பி. ஜியாவுல்ஹக் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய விசாரணை நடத்தி போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து முருகனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை பெற்று சென்றனர்.

இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், ஏட்டு விஜயகுமார், போலீஸ்காரர் நல்லேந்திரன் ஆகிய 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார். மேலும் இந்த சம்பவம் குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தி வருகிறார் என்றும் டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News