செய்திகள்
மழை

திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2019-12-14 11:52 GMT   |   Update On 2019-12-14 11:52 GMT
திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் இன்று காலை பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கூடலூர்:

வடகிழக்கு பருவமழை யையொட்டி தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் நிறைந்தன. வராகநதி, கொட்டக்குடி ஆறு, மூலவைகையாறு ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மும்முரமாக நெல்சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு குறைந்து பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் டிசம்பர் மாத இறுதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.

அதன்படி நேற்று இரவு முதல் திண்டுக்கல், தேனி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. திண்டுக்கல் பழனி, ஒட்டன்சத்திரம், அய்யலூர், வடமதுரை, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை சாரல் மழை நீடித்தது.

மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள தேனி, பெரியகுளம், கூடலூர், உத்தமபாளையம், தேவாரம், போடி, லோயர்கேம்ப், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 127.60 அடியாக உள்ளது. 631 கன அடி நீர் வருகிற நிலையில் 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 68.57 அடியாக உள்ளது. 933 கன அடி நீர் வருகிற நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 810 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.90 அடியாக உள்ளது. 61 கன அடி நீர் வருகிறது. 90 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 34 கன அடி நீர் வருகிறது.30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 8, தேக்கடி 2, கூடலூர் 2.7, மஞ்சளாறு 8.4, சண்முகாநதி அணை 2, உத்தமபாளையம் 2.1, கொடைக்கானல் 4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News