செய்திகள்
வெங்காயம்

வெங்காயம் இறக்குமதி செய்த ஜவுளி அதிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி - மாம்பலம் போலீசில் புகார்

Published On 2019-12-10 09:30 GMT   |   Update On 2019-12-10 10:19 GMT
வெங்காயம் இறக்குமதி செய்த ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.8 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக மாம்பலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் வெங்காயத்துக்கு தனி இடம் உண்டு.

சாம்பாரில் தொடங்கி பிரியாணி வரையில் வெங்காயம் இல்லாமல் சமைக்க முடியாது. ஆனால் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாதமாக விண்ணை தொட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து பெருமளவு வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் மத்திய-மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் எப்போதுமே வெங்காய விளைச்சல் அதிகமாக இருக்கும். இதனால் தமிழகத்தை சேர்ந்த வியாபாரிகள் பலர் நாசிக்கில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் காய்கறிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தி.நகரில் உள்ள பிரபல ஜவுளிக்கடை அதிபர் ஒருவர் வியாபாரத்துக்காக நாசிக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் வெங்காயத்தை இறக்குமதி செய்தார்.

தன்னிடம் பணியாற்றிய பிரகாஷ் என்ற டிரைவர் மூலமாக வெங்காயத்தை இறக்குமதி செய்த ஜவுளிக்கடை அதிபர் அதற்கான பணம் ரூ.8 லட்சத்தை கொடுத்துள்ளார். இந்த பணத்தை டிரைவர் பிரகாஷ் தனது வங்கி கணக்கில் போட்டுள்ளார்.

நாசிக்கில் இருந்து வெங்காயத்தை அனுப்பி வைத்த மகாராஷ்டிர வியாபாரிக்கு பணம் போய் சேரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜவுளிக்கடை அதிபர் இதுபற்றி பிரகாசிடம் கேட்டார். இதற்கு அவர் உரிய பதிலை அளிக்கவில்லை.

இதுபற்றி மாம்பலம் போலீசில் ஜவுளிக்கடை அதிபர் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜவுளி அதிபரிடம் வங்கியில் பணம் செலுத்தியதற்கான ஆவணங்கள், வெங்காயத்தை இறக்குமதி செய்ததற்கான ஆவணங்கள் ஆகியவற்றை பெற்று போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, வங்கி ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், டிரைவர் பிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். மோசடி வழக்கில் பிரகாஷ் கைதாகிறார். தர்மபுரியை அடுத்த போச்சம்பள்ளியை சேர்ந்த அவரை பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News