செய்திகள்
பிஆர் பாண்டியன்

நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 கேட்டு 17-ந்தேதி தலைமைச் செயலகம் முற்றுகை: பி.ஆர்.பாண்டியன்

Published On 2019-12-06 10:39 GMT   |   Update On 2019-12-06 10:39 GMT
சத்தீஸ்கரைப் போல நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 கேட்டு 17-ந்தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என்று தஞ்சையில் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:

தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

மாநிலங்கள் அவையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கேட்ட கேள்விக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பதில் கூறும்போது, தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட 37 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க திட்டமிடப்பட்டு 15 இடங்களில் கிணறு வெட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கிணறுகள் அமையும் இடத்தில் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தால் அது குறித்து பரிசீலனை செய்வோம் என கூறியுள்ளார். இதனை வரவேற்கிறோம். ஆனால் விவசாயிகள் கூறிய பிறகும் அனுமதி கொடுத்தால் கண்டிப்பாக நாங்கள் போராடுவோம். இது ஒரு ஏமாற்று வேலையாக இருக்கக்கூடாது.

நாங்கள் ஏற்கனவே இது குறித்து பிரதமர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். அவர்களும் பெட்ரோலியத்துறை அமைச்சக அலுவலகத்தில் இந்த கோரிக்கைகளை அனுப்பி உள்ளதாக கூறினர். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி உபரிநீர் திட்டத்தை ராசி மணலில் அணை கட்டும் வரை செயல்படுத்தக் கூடாது. இதை வலியுறுத்தி வரும் 10-ந்தேதி திருவாரூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். தற்போது அதனை ஒத்தி வைத்து பொங்கல் பண்டிகைக்குப் பிறகு நடத்த உள்ளோம்.

காவிரி டெல்டாவில் பெய்த தொடர் மழையால் பயிர்களில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு காப்பாற்ற வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தீஸ்கர் மாநிலத்தில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 என நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது விவசாயிகளை ஊக்குவிக்கும் செயலாகும். அதேபோல் தமிழகத்திலும் நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 நிர்ணயம் செய்ய வேண்டும்.

இதை வலியுறுத்தி வரும் 17-ந்தேதி சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட உள்ளோம். இதில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்வார்கள். அதன் பிறகாவது அரசு அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News