செய்திகள்
பணம் மோசடி

மதுரையில் கிரானைட் அதிபர்-வியாபாரியிடம் ரூ. 6½ கோடி மோசடி

Published On 2019-12-05 09:07 GMT   |   Update On 2019-12-05 09:07 GMT
மதுரையில் கிரானைட் அதிபர், பழ வியாபாரியிடம் ரூ. 6½ கோடி மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை கே.கே. நகர், கரும்பாலை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், கிரானைட் குவாரி நடத்தி வருகிறார். இவர் மதுரை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சில மாதங்களுக்கு முன்பு மதுரை நாராயணபுரம் இந்தியன் பேங்க் காலனியைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 41), மானாமதுரை புதுக்கோட்டையைச் சேர்ந்த சேதுராஜா ஆகியோர் அறிமுகமானார்கள்.

இவர்கள் மதுரை ரிசர்வ் லைன், ஆரப்பாளையம், காந்தி மியூசியம் பகுதிகளில் ஓட்டல் நடத்தி வருவதாகவும், இதன் மூலம் தினமும் ரூ. 3 லட்சம் வரை லாபம் கிடைப்பதாகவும் கூறினார். எங்கள் தொழிலில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக ஆசைவார்த்தை கூறினார்.

இதனை நம்பி இரண்டு பேரிடமும் பல்வேறு தவணைகளில் ரூ. 5 கோடி வரை கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட பின் அவர்கள் லாபத்தில் பங்கு தரவில்லை. அசல் பணத்தை கேட்டபோது அதையும் பொய் காரணங்கள் கூறி இழுத்தடித்து வந்தனர்.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப் படையில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.

மதுரை அண்ணா நகர், சிங்கராயர் காலனியைச் சேர்ந்தவர் பாரதிராஜன் (60). மொத்த பழ, காய்கனிகளை வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

இவர் மாநகர் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த ராஜமடம் வடக்குத் தெருவைச் சேர்ந்த காமராஜ் என்பவர் சிங்கப்பூரில் பழ வியாபாரம் செய்து வருவதாகவும், அங்கு பழம், காய்கனிகளை அனுப்புமாறு கூறினார்.

இதனை நம்பி ரூ. 1 கோடியே 40 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள சரக்குகளை அனுப்பி வைத்தேன். அதன்பின் பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News