செய்திகள்
தீவிபத்து (கோப்புப்படம்)

தியாகராயநகரில் சேகர்ரெட்டி அலுவலகத்தில் தீவிபத்து

Published On 2019-12-03 09:22 GMT   |   Update On 2019-12-03 09:22 GMT
சென்னை தியாகராயநகரில் உள்ள சேகர் ரெட்டியின் அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் போராடி தீ கட்டுப்படுத்தப்பட்டது.

சென்னை:

சென்னை தியாகராய நகர் விஜயராகவா ரோட்டில் சேகர்ரெட்டிக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் உள்ளது.

இந்த கட்டிடத்தின் மூன்று மாடிகள் காலியாக உள்ளன. 4-வது மாடியில் சேகர் ரெட்டியின் அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் அவர் நடத்திவரும் ‘காண்டிராக்டு’ தொழில் தொடர்பான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறது. 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

நேற்று மாலையில் பணி முடிந்து அலுவலகத்தை பூட்டி சென்றனர். காவலாளி கீழ் தளத்தில் அமர்ந்து இருந்தார்.

இன்று காலை 7.30 மணி அளவில் 4-வது தளத்தில் இருந்த சேகர்ரெட்டி அலுவலகத்தில் இருந்து புகை வெளிவந்து கொண்டிருந்தது. அதை பார்த்ததும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து தேனாம்பேட்டை, கிண்டி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் அலுவலகத்தின்மேல் பகுதிக்கு சென்று கண்ணாடிகளை உடைத்து தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இருப்பினும் முக்கிய ஆவணங்கள், கம்ப்யூட்டர் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டன. இதுபற்றி தி.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. தீவிபத்து நடந்த அலுவலகத்தை சேகர்ரெட்டியும் அவரது குடும்பத்தினரும் பார்த்தனர்.
Tags:    

Similar News