செய்திகள்
மூதாட்டிகள் சேமித்து வைத்திருந்த பழைய ரூ. 1000, 500 நோட்டுகள்.

46 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுகளை சேமித்து வைத்திருத்த மூதாட்டிகள்

Published On 2019-11-27 05:33 GMT   |   Update On 2019-11-27 05:33 GMT
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதை அறியாமல் 46 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மூதாட்டிகள் சேமித்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூர் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கம்மாள் (78), ரங்கம்மாள் (75). இருவரும் அக்காள் - தங்கை. இருவரது கணவர்களும் இறந்து விட்டனர். இதனால் மகன்கள் வீட்டில் வசித்து வருகின்றனர்.

தற்போது திடீரென இருவருக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவர்களை இருவரையும் மகன்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் மேல் சிகிச்சை பெற வேண்டும் என டாக்டர்கள் கூறினார்கள். அதற்கு பணம் தேவைப்பட்டது.

இது குறித்து அவர்களது மகன்கள் தங்கள் தாயாரிடம்  தெரிவித்தனர். அப்போது இருவரும் யாருக்கும் தெரியாமல் வீட்டில் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து கொடுத்தனர்.

ரங்கம்மாள் ரூ. 24 ஆயிரம், தங்கம்மாள் ரூ. 22 ஆயிரம் கொடுத்தனர். அவை அனைத்தும் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட  பழைய ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் என்பது தெரிய வந்தது.

இதனால் அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பழைய ரூபாய் நோட்டுக்களை என்ன செய்வது? என குழப்பத்தில் உள்ளனர்.


இது தொடர்பாக ரங்கம்மாள், தங்கம்மாள் ஆகியோரிடம் கேட்ட போது கூறியதாவது:-

எங்களுக்கு ரூ. 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு அறிவித்தது தெரியாது. போதிய படிப்பறிவு இல்லை. இதனால் தான் இத்தனை நாட்கள் பத்திரமாக வைத்திருந்தோம். மகன்கள் சொல்லி தான் இந்த நோட்டுகள் செல்லாது என்ற விவரம் தெரியும். மருத்துவ செலவுக்காக தான் இந்த தொகையை வெளியில் எடுத்தோம்.

இல்லை என்றால் எங்களது பேரன், பேத்திகளுக்கு எதிர் காலத்தில் கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருந்தோம். தற்போது என்ன செய்வது என்று தெரியவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News