செய்திகள்
மழை (கோப்புப்படம்)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2019-11-23 10:09 GMT   |   Update On 2019-11-23 10:09 GMT
திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல்:

வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தினால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. முல்லைப் பெரியாறு நீர் பிடிப்பு பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான வரு‌ஷநாடு, கண்டமனூர், வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட இடங்களில் பெய்த மழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணைகளின் நீர் மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று இரவில் தொடங்கி இன்று காலை வரை திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சத்திரப்பட்டி, கொடைக்கானல், வேடசந்தூர், கூடலூர், பெரியகுளம், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேளாண் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 129.15 அடியாக உள்ளது. 1509 கன அடி நீர் வருகிற நிலையில் 1650 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 61.22 அடியாக உள்ளது. 2380 கன அடி நீர் வருகிறது. குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 260 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 52.50 அடியாக உள்ளது. 56 கன அடி நீர் வருகிற நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.37 அடியாக உள்ளது. 52 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 0.2, தேக்கடி 0.4, கூடலூர் 1, சண்முகா நதி அணை 2, மஞ்சளாறு 1, நத்தம் 0.5, பழனி 1, சத்திரப்பட்டி 16.2, வேடசந்தூர் 4.2, காமாட்சிபுரம் 4.4, கொடைக்கானல் 7.2, கொடைக்கானல் போர்ட் கிளப் 4.5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
Tags:    

Similar News