செய்திகள்
காட்டு யானைகள்

கோவை அருகே ஊருக்குள் புகுந்து வீதியில் உலா வந்த காட்டு யானைகள்

Published On 2019-11-22 09:33 GMT   |   Update On 2019-11-22 09:33 GMT
கோவை அருகே காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை அருகே உள்ள ஆனைக்கட்டி, பொன்னுத்தம்மன் கோவில், அனுவாவி சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் வாழ்ந்து வருகிறது.

இந்த யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி பெரிய தடாகம், சின்ன தடாகம், சோமையம் பாளையம், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு உள்ள வாழைகள், தென்னை மரங்களை தின்றும் காலால் மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. சில சமயங்களில் மனித உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து 3 காட்டு யானைகள் கணுவாய் பகுதிக்குள் புகுந்தது. இந்த யானைகள் வீதியில் உலா வந்தது.

இதனை பார்த்தும் நாய்கள் குரைத்தது. இதனால் ஆத்திரம் அடைந்த யானைகள் நாய்களை விரட்டியது. இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலை தளங்களில் பரவ விட்டனர்.இந்த காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

யானைகள் ஊருக்கும் உலா வரும் தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். 3 மணி நேரம் போராடி யானைகளை மலை பகுதிக்கு விரட்டி விட்டனர். கணுவாய் பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Tags:    

Similar News