செய்திகள்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2019-11-21 08:53 GMT   |   Update On 2019-11-21 08:53 GMT
வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் முடிந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக தென் மாவட்டத்தில் இயல்பான அளவைவிட அதிகமாக மழை பெய்துள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சென்னையில் எதிர்பார்த்த அளவு இன்னும் மழை பெய்யவில்லை. மழை அளவு அதிகபட்ச பற்றாக்குறையாக உள்ளது.

வெப்ப சலனம் மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதியிலும் இரவில் மழை பெய்தது. அதிகாலையில் கனமழை பெய்தது.

எழும்பூர், அம்பத்தூர், முகப்பேர், அண்ணாநகர், அசோக்நகர், வேளச்சேரி, பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், திருமங்கலம், ஆவடி, அம்பத்தூர், அடையாறு, விமான நிலையம், பல்லாவரம், சேலையூர், திருவான்மியூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது.

இதே போல புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. காலை 6.30 மணி வரை நீடித்த மழை படிப்படியாக குறைந்தது.

இதனால் மாணவ- மாணவிகள் பெரும் சிரமத்துக்கு இடையே பள்ளிக்கு சென்றனர். காலை 7 மணிக்கு பிறகு மழை நின்றதால் அலுவலகங்களுக்கு செல்லக் கூடியவர்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சென்றனர்.

விடிய விடிய மழை பெய்த போதிலும் சாலையில் ஒரு சில இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளம், குழிகள் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று கூறியதாவது:-


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்ப சலனம் காரணமாக லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்,

கோவை, சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருச்செந்தூரில் 7 செ.மீ., சீர்காழி, காயல்பட்டினம் 6 செ.மீ., நிலக்கோட்டை, பாப்பிரெட்டிபட்டி 5 செ.மீ., சென்னை விமான நிலையம் 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News