செய்திகள்
சத்தியநாராயண ராவ் காலபைரவர் கோவிலை வலம் வந்த காட்சி.

மக்கள் பிரச்சினையை தீர்க்க ரஜினி அரசியலுக்கு வருவார்- அண்ணன் சத்தியநாராயண ராவ் பேட்டி

Published On 2019-11-17 11:51 GMT   |   Update On 2019-11-17 11:51 GMT
தமிழகத்தில் மக்கள் பிரச்சினையை தீர்க்க நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் கூறியுள்ளார்.

ரஜினியின் அண்ணன் சத்திய நாராயண ராவ் கெய்க்வாட் இன்று தர்மபுரியை அடுத்த அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் 108 கலச பூஜை நடத்தினார்.

பின்னர் காலபைரவரின் கோவிலில் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.

ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்றிட வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டது.

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் என்றும், தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவத்தை போக்குபவர் என்றும் பொருள்.

தினமும் வேதனையை அனுபவிப்பவர்கள், தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்கள், அவற்றில் இருந்து விடுபட பைரவரை வழிபடுவார்கள். பைரவரை தொடர்ந்து வணங்கினால் தீவினைகள் அழியும். எதிரிகள் தொல்லை ஒழியும். யாருக்கும் அடிபணியாத, தலைகுனியாத வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

சமீபத்தில் ரஜினி கூறிய வெற்றிட அரசியல் கருத்து அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணா சிறப்பு யாகம் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி எதிரிகளை வீழ்த்தி அரசியலில் வெற்றி பெற இந்த யாகம் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறப்பு யாகம் நடத்திய பிறகு, ரஜினிகாந்த் அண்ணன் நாராயணா நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த கோவிலுக்கு வந்திருந்தேன். கடவுள் அருளால் மீண்டும் இன்று கோவிலுக்கு வந்துள்ளேன்.

ரஜினியின் குடும்பம் மற்றும் பொதுமக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டினேன். ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். நல்லதை செய்வார்.


ரஜினி மீது மக்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். ஆட்சிக்கு வந்தால் நன்றாக ஆட்சி செய்வார். மற்ற எதற்கும் ஆசைப் படாதவராக இருக்கிறார். எந்த ஒரு எதிர் பார்ப்பும் அவரிடம் இல்லை.

மக்கள் நலனுக்கு மட்டும் விருப்பப்படுவார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார். மக்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக சந்தித்து அதற்கு தீர்வு காண்பார். அவரால் ஒரு நல்ல ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர முடியும். அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவரே விரைவில் அறிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News