செய்திகள்
கோப்பு படம்

தனியார் ஆஸ்பத்திரியில் வாலிபருக்கு போட்ட ஊசி உடைந்து உடலில் சிக்கியது: டாக்டர்-நர்சு மீது புகார்

Published On 2019-11-12 07:55 GMT   |   Update On 2019-11-12 07:55 GMT
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வாலிபருக்கு போட்ட ஊசி உடைந்து உடலில் சிக்கிய சம்பவத்தில் டாக்டர் மற்றும் நர்சு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

மாதவரம் பால்பண்ணை காலனியை சேர்ந்தவர் ஜான் (20). இவருக்கு 2 வாரங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவருக்கு டாக்டர் ஊசி போட்டுள்ளார்.

அதன்பின் அவருக்கு ஊசி போட்ட இடத்தில் தொடர்ந்து வலி இருந்தது. இதையடுத்து ஐஸ் ஒத்தடம் கொடுக்கும்படி டாக்டர் கூறினார்.

ஆனாலும் அவருக்கு வலி நீடித்தபடியே இருந்தது. இதையடுத்து ஜானை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, ஊசி முனை உடலில் இருப்பது தெரிய வந்தது.

தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டர் ஊசி போட்ட போது அது உடைந்து ஜான் உடலில் சிக்கி உள்ளது. இதை டாக்டர், நர்சு கவனிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு சிறிய ஆபரே‌ஷன் செய்து உடைந்த ஊசி முனையை வெளியே எடுத்தனர்.

இதுகுறித்து ஜானின் தாயார் மேரி கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதில், ‘தனது மகனுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் ஊசி போட்டபோது உடைந்து உடலில் சிக்கி உள்ளது. இதனால் உடல் வலி, மன உளைச்சலால் எனது மகன் அவதிப்பட்டான்.

எனவே தனியார் ஆஸ்பத்திரி டாக்டர், நர்சு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தனியார் ஆஸ்பத்திரி தரப்பில் கூறும்போது, ஜான் காய்ச்சலுக்காக எங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 2 நாட்கள் கழித்து மீண்டும் வந்து காய்ச்சல் இன்னும் இருப்பதாக கூறினார். அப்போது முன்பு போட்ட ஊசியை வேறு ஒரு ஆஸ்பத்திரியில் போட்டுக்கொள்ளலாமா? என்று வரவேற்பு அறை ஊழியரிடம் விசாரித்துள்ளார்.

அதற்கு டாக்டரிடம் கேட்டு ஊசி போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அப்போது அவர் தனக்கு வலி இருப்பதாக கூறவே இல்லை’ என்றனர்.

இதை ஜான் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். காய்ச்சலுக்கு ஜான் வேறு எந்த ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெறவில்லை என்று கூறினார்.
Tags:    

Similar News