செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்கள் அமைதி காக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Published On 2019-11-09 03:49 GMT   |   Update On 2019-11-09 03:49 GMT
அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வர உள்ளதையொட்டி தமிழக மக்கள் அமைதி காக்கும்படி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க இருப்பதை யொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. உச்சநீதிமன்ற வளாக பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



அயோத்தியில் மாநில போலீசாருடன் துணை ராணுவ படை வீரர்கள் 4 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதையொட்டி தமிழக முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதையொட்டி அனைத்து மத தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் அமைதி காக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு இடம் தராமல், தமிழகத்தை அமைதிப்பூங்காவாக திகழச் செய்யுங்கள்.

சாதி, மத பூசல் இன்றி தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது.

இந்தியாவிற்கே தமிழகம் முன்னுதாரணமாக விளங்குவதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News