செய்திகள்
கைது

சேலத்தில் திருமண மண்டபத்தில் 25 பவுன் நகை திருட்டு- கொள்ளையன் கைது

Published On 2019-11-07 04:25 GMT   |   Update On 2019-11-07 04:25 GMT
சேலத்தில் திருமண மண்டபத்தில் இருந்து 25 பவுன் நகையை திருடிச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

சேலம் மெய்யனூர் பகுதி தி.மு.க. செயலாளர் சக்கரை சரவணன். இவரது மகள் சவுந்தர்யா திருமணம் கடந்த 1-ந் தேதி சேலம் இரும்பாலை மெயின் ரோட்டில் உள்ள எம்.எஸ்.வி. திருமண மண்டபத்தில் நடந்தது.

திருமணத்தன்று மணமகன் சதீஷின் உறவினரான விக்னேஷ் என்பவர் மணமகன் அறையில் 25 பவுன் தங்க நகையுடன் ஒரு கைப்பையை வைத்தார். சிறிது நேரத்தில் நகைப்பையை பார்த்த போது மாயமானது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் மற்றும் அவரது உறவினர்கள் திருமண மண்டபம் முழுவதும் நகைப்பையை தேடினர். ஆனாலும் நகைப்பை கிடைக்கவில்லை.

இதனால் யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்த விக்னேஷ் சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த திருமண மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கு பதிவாகி இருந்த கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது மணமகன் அறைக்கு செல்லும் மர்மநபர் ஒருவர் அங்கு உறவினர் போல நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததும், பின்னர் திடீரென யாரும் கவனிக்காத நேரத்தில் நகை இருந்த பையை எடுத்து கொண்டு வெளியில் வரும் காட்சிகளும் பதிவாகி இருந்தது.

இதையடுத்து அந்த மர்மநபரை தேடி வந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அவர் திருடிய நகையை எங்கு பதுக்கி வைத்துள்ளார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை முடிவில் அந்த கொள்ளையனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Tags:    

Similar News