செய்திகள்
கோப்பு படம்

காரணம் இல்லாமல் கணவரை சிறை வைத்திருப்பதாக போலீஸ் மீது இளம்பெண் புகார் - நீதிபதி கண்டனம்

Published On 2019-11-05 09:50 GMT   |   Update On 2019-11-05 09:50 GMT
கும்மிடிப்பூண்டி அருகே காரணம் இல்லாமல் கணவரை சிறை வைத்திருப்பதாக போலீஸ் மீது இளம்பெண் புகார் கூறியதையடுத்து நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி:

பொன்னேரியை சேர்ந்த விஜய் (21), விக்னேஷ் (22) பெரும்பாடு பகுதியைச் சேர்ந்த பிரவின்குமார் (25), கும்மிடிப்பூண்டியை சேர்ந்த லிவிங்ஸ்டன் (23) ஆகிய 4 பேரை ஒரு வழக்கில் கும்மிடிப்பூண்டி போலீசார் பிடித்து சென்றனர்.

கடந்த 3 நாட்களாக அவர்களை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன காரணத்துக்காக 4 பேரையும் பிடித்து சென்றார்கள்? என்ற விவரத்தை அவர்களின் குடும்பத்தினருக்கு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் பிரவின் குமாரின் மனைவி ஷாலினி இன்று காலை கும்மிடிப்பூண்டி கோர்ட்டுக்கு சென்று மாவட்ட நடுவர் மற்றும் உரிமையியல் நீதிபதி அலிசியாவிடம் ஒரு புகார் செய்தார்.

அதில், எனது கணவர் உள்பட சிலரை கும்மிடிப்பூண்டி போலீசார் எந்த காரணமுமின்றி பிடித்து சென்றுள்ளனர். எங்களுக்கும் எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் 3 நாட்களாக போலீஸ் நிலையத்திலேயே அவரை சிறை வைத்துள்ளனர். இது மனித உரிமை மீறலாகும். அவரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

புகாரை ஏற்றுக்கொண்ட நீதிபதி அலிசியா உடனடியாக ஆட்டோவில் ஏறி கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். நீதிபதி திடீரென போலீஸ் நிலையம் வந்ததால் அங்கிருந்த போலீசார் திடுக்கிட்டனர். நேராக லாக்கப்புக்கு சென்ற நீதிபதி அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த 4 பேரின் பெயர் விவரங்களை கேட்டார்.

அவர்கள் பிரவின்குமார், விஜய், விக்னேஷ், லிவிங்ஸ்டன் என்பது தெரிய வந்தது. கடந்த 3 நாட்களாக தங்களை அடைத்து வைத்திருப்பதாக அவர்கள் நீதிபதியிடம் கூறினர்.

எதற்காக இவர்களை பிடித்து வைத்துள்ளீர்கள்? இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறு வழக்குப்பதிவு செய்திருந்தால் ஏன் கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை? என கேட்டார். இதற்கு இன்ஸ்பெக்டர் சக்திவேல் உரிய விளக்கம் அளிக்கவில்லை.

இதனால் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி அலிசியா, போலீஸ் நிலையத்தில் இருந்த பிரவின் குமார் உள்பட 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டார்.
Tags:    

Similar News