செய்திகள்
நிலச்சரிவு

கொடைக்கானலில் கன மழை - நிலச்சரிவு, மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Published On 2019-10-31 12:28 GMT   |   Update On 2019-10-31 12:28 GMT
கொடைக்கானலில் பெய்த கன மழையின் காரணமாக நிலச்சரிவு, மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
கொடைக்கானல்:

பருவ மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கொடைக்கானலில் கன மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மின் கம்பங்களும் சாய்வதால் மின் தடை ஏற்பட்டு ஊழியர்கள் மழையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கீழ் மலை கிராமங்களான தாண்டிக்குடி, பண்ணைக்காடு, பாய்ச்சலூர், மச்சூர் உள்ளிட்ட இடங்களில் மரம் முறிந்து விழுந்து மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. ஊழியர்கள் இதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருந்த போதும் மின் வினியோகம் இல்லாததால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர். கன மழை காரணமாக கொடைக்கானலில் சுற்றுலா இடங்கள் மூடப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

வில்பட்டி சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஊழியர்கள் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதே போல் பெருமாள் மலை பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததால் சுமார் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாயுடுபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையின் மீது மரம் முறிந்து விழுந்ததால் கடும் சேதம் ஏற்பட்டது.

பழனி சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இந்த மரத்தை அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்களே அப்புறப்படுத்தினர். மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது நிலச்சரிவு மற்றும் மரம் முறிந்து விழுவதால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News