செய்திகள்
சிறுவன் சுர்ஜித் அவனது பெற்றோருடன்

சிறுவன் சுர்ஜித் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது

Published On 2019-10-29 01:16 GMT   |   Update On 2019-10-29 01:16 GMT
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து பலியான 2 வயது குழந்தை சுர்ஜித் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவனது சொந்த ஊரான நடுக்காட்டுப்பட்டியில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
திருச்சி:

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். குழந்தையை மீட்க பல்வேறு மீட்புக்குழுவினர் தொடர்ந்து முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.

சுர்ஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் போது சிறுவன் விழுந்த ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள இடங்கள் அனைத்தும் காவல்துறையினர்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.



மேலும் ஆழ்துளை கிணறு அருகே அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ குழுவினர், மற்றும் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தி வருவது அந்த இடத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன், சிறுவன் சுர்ஜித் உயிரிழந்ததாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சிறுவனின் உடல் பல்வேறு முயற்சிக்கு மத்தியில் தீயணைப்பு மற்றும், மீட்புபடையினரால் மீட்கப்பட்டது.  பின்னர் மீட்பு படையினர் உதவியுடன் அரசு ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.   தொடர்ந்து அரசு அதிகாரிகள், மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் பிற அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பிரேத பரிசோதனையை விரைந்து முடிக்க ஆணை பிறப்பித்தனர். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டனர்.



சிறுவன் சுர்ஜித் உடல் சில மணிநேரங்களில் பிரரேத பரிசோதனை நிறைவடைந்தது.  அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்கள் சிறுவன் சுர்ஜித்க்கு மாலை செலுத்தி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.  பின்னர் சிறுவன் சுர்ஜித் உடல் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அவனது சொந்த ஊரான நடுக்காட்டுப்பட்டியில் உள்ள பாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட உள்ளது. ஆம்புலன்ஸ் செல்லும் வழி நெடுங்கிலும் மக்கள் காத்திருந்து சிறுவன் சுர்ஜித் உடலுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர்.  இதனிடையே சுர்ஜித்தின் தாய் மற்றும் அவனது குடும்பத்தினர் அனைவரும் கல்லறை தோட்டத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.  பின்னர் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர் அங்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின்பு சிறுவன் சுர்ஜித் உடல் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வு அங்கு கூடியிருந்த மக்கள் கண்களில் கண்ணீரையும், சோகத்தையும் வரவழைத்தது.

அதனை தொடர்நது சிறுவன் சுர்ஜித் உடலுக்கு மக்கள் பலர் தங்களது அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News