செய்திகள்
கோப்பு படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு

Published On 2019-10-19 16:12 GMT   |   Update On 2019-10-19 16:12 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், தலைமையில், கலெக்டர் வீரராகவ ராவ் முன்னிலையில், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு புயல், வெள்ளம் போன்ற அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்டத்தில் எளிதில் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளாக 39 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்தப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் தலைமையில் 15 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுகள்ள ஆய்வுகள் மூலம் அந்தந்த பகுதிகளில் முந்தைய காலங்களில் ஏற்பட்ட தண்ணீர் தேங்கிய -வெள்ள பாதிப்பு போன்ற நிகழ்வுகளை பகுப்பாய்வு செய்தும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும் மழை, வெள்ளம் போன்ற பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தண்ணீர் தேங்காமல் விரைவாக வடிந்து ஓடும் வகையில் நீர் வடிகால்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதேபோல அவசர கால சூழ்நிலையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 5000-க்கும் மேற்பட்ட முதல்நிலை மீட்புப் பணியாளர்கள், 132 கால்நடை மீட்பாளர்கள், 199 மரம் வெட்டும் நபர்கள், 21 பாம்பு பிடிக்கும் நபர்கள் கண்டறியப்பட்டு உரிய பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

இதுதவிர அவசர கால சூழ்நிலையில் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக 23 பல்நோக்கு பாதுகாப்பு மைய கட்டிடங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

இந்த மையங்களில் பொதுமக்களுக்குத் தேவையான உணவு வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கலெக்டர் பரமக்குடி நகரில் சுகாதாரத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்கை பார்வையிட்டனர்.

இந்த நிகழ்வுகளின் போது கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பிரதீப் குமார் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, சார் ஆட்சியர் சுகபுத்திரன் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், இணை இயக்குநர் (வேளாண்மை துறை) சொர்ணமாணிக்கம், மருத்துவ நலப்பணிகள் வெங்கடேசன், செயற்பொறியாளர்கள் பொதுப்பணித்துறை வெங்கட கிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை சிவகாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சேக் அப்துல்லா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் குமரகுருபரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News