செய்திகள்
கைது

சென்னை கல்லூரி மாணவர்கள் 25 பேர் அதிரடி கைது

Published On 2019-10-16 09:30 GMT   |   Update On 2019-10-16 09:30 GMT
கொலை வழக்கு சாட்சியை மிரட்டிய சென்னை கல்லூரி மாணவர்கள் 25 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சென்னை:

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ் என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2016ல் தங்கராஜை ராஜேஷ் தரப்பினரை சேர்ந்தவர்கள் மேல்மனம்பேடு கிராமத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

அதே போல் தங்கராஜின் சகோதரர் வெங்கட்ராமனை கடந்த 2018-ல் அதே ராஜேஷ் தரப்பினர் அவரது வீட்டிற்குள் புகுந்து வெட்டி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ராஜேஷ், தினேஷ், வீரா, இளங்கோ, கவிக்குமார் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ராஜேஷுக்கு எதிராக சாட்சி சொல்ல வந்த மேல் மனம்பேடு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவரை சென்னையில் உள்ள கலைக்கல்லூரி மாணவர்கள் 25 பேர் சுற்றி வளைத்து பொய்சாட்சி சொல்லுமாறு மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து கஜேந்திரன் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவர்களான விஷ்ணு, மணிகண்டன், அருண்குமார், சூர்யா, சக்தி, ஜீவா உள்ளிட்ட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். குற்றவாளிகளில் ஒருவரது உறவினர் கல்லூரி மாணவர் ஆவார். அவரது ஏற்பாட்டில் உடன்படித்த கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து சாட்சியை மிரட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News