செய்திகள்
தற்கொலை

குடிப்பழக்கத்தை மகன் கண்டித்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-10-13 14:21 GMT   |   Update On 2019-10-13 14:21 GMT
வீராம்பட்டினத்தில் குடிப்பழக்கத்தை மகன் கண்டித்ததால் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:

புதுவை வீராம்பட்டினம் பகவான் நகரை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது53).  இவருக்கு தேவகி என்ற மனைவியும், ஷோபன்பாபு (25)  என்ற மகன் மற்றும்  ஒரு மகள்  உள்ளனர்.  தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைபார்த்து வந்த சுந்தரராஜன் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல்  மதுகுடித்து வந்தார். மேலும் மதுகுடித்துவிட்டு போதையில் மதுக்கடை வாசலில் மயங்கி கிடப்பதை  வழக்கமாக கொண்டு இருந்தார். அப்போது சுந்தரராஜனை அவரது மகன் ஷோபன்பாபு மீட்டு வீட்டுக்கு அழைத்து வருவார்.

அதுபோல கடந்த 5-ந்தேதி சுந்தரராஜன் மதுகுடித்துவிட்டு மதுக்கடை வாசலில்  மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை   ஷோபன்பாபு மீட்டு வீட்டுக்கு அழைத்து வந்து தந்தையை கண்டித்தார். மகன் கண்டித்ததால் சுந்தரராஜன் கோபத்தில் அன்று இரவு  வீட்டை விட்டு வெளியேறினார்.  அதன்பிறகு அவர் வீட்டுக்கு செல்லவில்லை. 

இந்த நிலையில் காக்காயந்தோப்பு அரிக்கன்மேடு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் உடல் அழுகிய நிலையில் ஆண் ஒருவர் தூக்கில்  பிணமாக தொங்குவதாக அப்பகுதிகளை சேர்ந்தவர்கள் அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் ஷோபன்பாபுவுக்கும் தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஷோபன்பாபு சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது  தூக்கில்  பிணமாக தொங்குவது தனது தந்தை  சுந்தரராஜன்  என்பதை உறுதி செய்தார்.

இதுகுறித்து  ஷோபன்பாபு கொடுத்த புகாரின் பேரில்  அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை  நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News