செய்திகள்
ஆலோசனைக் கூட்டத்தில் சீன அதிபர் பேசிய காட்சி

இந்தியா-சீனா பேச்சுவார்த்தை தொடரவேண்டும்: ஜி ஜின்பிங் விருப்பம்

Published On 2019-10-12 06:58 GMT   |   Update On 2019-10-12 06:58 GMT
இந்தியா-சீனா இடையிலான உறவு மேம்பட்டு வருவதாகவும், இதுபோன்ற பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
சென்னை:

சீன அதிபர் ஜி ஜின்பிங் - இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் முறைசாரா சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. நேற்று மாலை மாமல்லபுரத்தில் அர்ஜூனன் தபசு பகுதியில் தொடங்கி பல்வேறு சுற்றுலா பகுதிகளை இருவரும் பார்வையிட்டனர். கலைநிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர்.

இன்று காலை பிரதமர் மோடி தங்கி இருக்கும் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் மீண்டும் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். கண்ணாடி அறையில் இருந்தபடி கடலையும் இயற்கையும் ரசித்தபடி இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சீன வெளியுறவு மந்திரி வாங் யி, இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசும்போது, மாமல்லபுரம் வருகையை மறக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

“தமிழகத்தின் சிறப்பான விருந்தோம்பலை நானும், எனது நண்பர்களும் நன்றாக உணர்ந்துள்ளோம். தமிழகத்தின் விருந்தோம்பல் எனக்கும் உடன் வந்தவர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

மிகவும் சிறப்பான வரவேற்பு அளித்தமைக்கு நன்றி. இருநாட்டு உறவும் மேம்பட்டு வருகிறது. இதுபோன்ற பேச்சுவார்த்தை தொடர வேண்டும்” என்று ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார்.
Tags:    

Similar News