செய்திகள்
கோப்புப் படம்.

ஒரத்தநாட்டில் மதுபானம் பதுக்கிய குடோனுக்கு சீல் வைப்பு

Published On 2019-10-03 16:39 GMT   |   Update On 2019-10-03 16:39 GMT
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் மதுபானம் பதுக்கிய குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்து 1000 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு டவுண் சந்தைபேட்டை பிரசித்தி பெற்ற மார்க்கெட் ஆகும். இங்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள். இங்குள்ள ஒரு குடோனில் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டர் அண்ணாதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதைத் தொடர்ந்து அவர் அந்த குடோனில் சோதனை நடத்த மதுவிலக்கு பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் கலால் பிரிவு மாவட்ட மேலாளர் ஏழுமலை தலைமையில் அதிகாரிகள் ஒரத்தநாடு சந்தைபேட்டை குடோனில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1000 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் சோதனை செய்ய வந்ததும் அங்கிருந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அந்த குடோன் அரசியல் பிரமுகர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த குடோனை பூட்டி அதிகாரிகள் `சீல்' வைத்தனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் பட்டுக்கோட்டை மது விலக்கு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டன. இந்த சம்பவம் ஒரத்தநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News