செய்திகள்
டயர் திருடப்பட்ட கார்.

கார் வேண்டாம்... டயர் போதும்... புதிய காரின் 4 டயர்களையும் கழற்றி சென்ற திருடன்

Published On 2019-10-01 07:48 GMT   |   Update On 2019-10-01 09:33 GMT
சென்னை ஜெ.ஜெ.நகரில் புதிய காரின் 4 டயர்களையும் கழற்றி சென்ற திருடன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

திருடர்கள்... பலவிதம்!
ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதம்!
திருட்டுக்கள் பலவிதம்!
ஒவ்வொன்றும் புதுவிதம்!

தினமும் எவ்வளவோ திருட்டுக்கள் நடப்பது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். இதில் ஈடுபடும் திருடர்களும் திருடசெல்லும் வீடுகளில் உணவுகளை சாப்பிடுவது, ஊஞ்சல்களில் ஆடி மகிழ்வது, எதுவும் கிடைக்காவிட்டால் வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை வாரி வீசிவிட்டு சென்றதை எல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.

இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ஒரு திருடனின் திருட்டு அமைந்து இருக்கிறது.

சென்னை ஜெ.ஜெ.நகர் டி.வி.எஸ். காலனியை சேர்ந்தவர் மகேஷ்பாபு. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஒரு மாதத்துக்கு முன்பு ‘மாருதி சியாஸ்’ என்ற புதுகார் வாங்கினார்.

தினமும் அலுவலகத்துக்கு காரில் செல்லும் மகேஷ்பாபு இரு தெருக்கள் தாண்டி அங்குள்ள உறவினர் வீட்டு முன்பு காரை நிறுத்தி வைப்பார்.

வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமையும் காரை நிறுத்தி இருந்தார். நேற்று காலையில் காரை எடுக்க சென்றபோது மகேஷ்பாபு அதிர்ந்துபோனார்.

4 வீல்கள் இருக்கும் இடத்தில் கற்களை வைத்து அதில் காரை நிற்க செய்து 4 டயர்களையும் கழற்றிசென்றுவிட்டார்கள்.

கார்களை திருடி சென்றால் விற்பது கடினம். எனவே டயர்களை கழற்றி விற்றால் போதும். கிடைத்தவரை லாபம் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.

இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

நிச்சயமாக இதை ஒருவர் அல்லது இருவர் செய்து இருக்க முடியாது. வீல்களை கழற்றி, ஆட்டோ, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில்தான் ஏற்றி சென்றிருக்க வேண்டும்.

எனவே போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து வருகிறார்கள்.
Tags:    

Similar News