செய்திகள்
உதித் சூர்யா- நீட் தேர்வு எழுதியவர்.

நீட் தேர்வு ஆள் மாறாட்டம்: உதித் சூர்யா, அவரது தந்தைக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

Published On 2019-09-26 12:56 GMT   |   Update On 2019-09-26 16:09 GMT
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் உதித் சூர்யா அவரது தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க தேனி கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி: 

சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேசன். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் உதித் சூர்யா(21). இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 முடித்தார். இரண்டு முறை 'நீட்' நுழைவுத் தேர்வு எழுதியும், உதித் சூர்யா தேர்ச்சி பெறவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், மூன்றாவது முயற்சியாக, மே 5 ல் நடந்த நீட் தேர்வில் உதித் சூர்யாவை பங்கேற்க வைத்தார். இதில், அவர், 385 மதிப்பெண்கள் பெற்று, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் இணைந்தார். இவர் மும்பையில், வேறு ஒருவரை தேர்வு எழுத வைத்ததும், தேர்ச்சி பெற்றதும், ஆள்மாறாட்டம் செய்து எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக தேனி மருத்துவ கல்லூரி டீன் ராஜேந்திரன் தேனி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து உதித் சூர்யா, குடும்பத்துடன் தலைமறைவானார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி அதிகாரிகள் உதித் சூர்யாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், தேனி போலீசார், திருப்பதியில் பதுங்கி இருந்த உதித் சூ்ரயாவை கைது செய்தனர். பின்னர், சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தேனிக்கு அழைத்து வரப்பட்ட உதித் சூர்யா மற்றும் அவரது பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது, நீட் தேர்வில், உதித் சூர்யா ஆள்மாறாட்டம் செய்ததை அவரது தந்தை வெங்கடேசன் ஒப்பு கொண்டார். மகன் டாக்டராக வேண்டும் என்பதற்காக பின் விளைவுகள் தெரியாமல் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறியுள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, வெங்கடேசனையும் சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர். இருவர் மீதும் ஆள்மாறாட்டம், போலி ஆவணம் தயாரித்தல், சதித்திட்டம் தீட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

2 பேரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tags:    

Similar News