செய்திகள்
கைது

அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக மோசடி- தனியார் நிறுவன நிர்வாகி கைது

Published On 2019-09-24 14:16 GMT   |   Update On 2019-09-24 14:16 GMT
கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து அமெரிக்காவில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த தனியார் நிறுவன நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
கோவை:

சென்னை அமெரிக்க துணை தூதரகத்தின் உதவி மண்டல பாதுகாப்பு அதிகாரி ஷேன் பிரவுன் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

அதில் கோவை நியூசித்தாபுதூர் ஆவாராம்பாளையம் ரோடு 2-வது தளத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பாஸ்போர்ட், விசா பெற்று தரும் பணிகளை செய்து வந்தது. இந்த நிறுவனம் கலைமணி, சதிஷ்குமார் ஆகியோரிடம் அமெரிக்கா விசா பெற்று தருவதாவும், அமெரிக்காவில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாகவும் பெரும் தொகையை பேரம் பேசி முன் தொகை பெற்று இருப்பதாகவும், விசா பெறுவதற்கு போலி ஆவணங்களை இந்த நிறுவனம் தயார் செய்து இணைத்து இருப்பதாகவும், அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி இருந்தார்.

இது குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதன் பேரில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த நிறுவனத்தின் நியூசித்தாபுதூர் கிளையில் தலைமை பொறுப்பில் கோவை சிட்கோசுந்தராபுரம் பிள்ளையார் புரத்தை சேர்ந்த நிவிஸ் இருந்து வந்தது தெரியவந்தது. அவரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News