செய்திகள்
கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை.

அதிராம்பட்டினம் அருகே 5 அடி உயர பழங்கால நடராஜர் சிலை கண்டெடுப்பு- பொன். மாணிக்கவேல் ஆய்வு

Published On 2019-09-18 12:10 GMT   |   Update On 2019-09-18 12:10 GMT
அதிராம்பட்டினம் அருகே 5 அடி உயர பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை பொன். மாணிக்கவேல் பார்வையிட்டார்.

அதிராம்பட்டினம்:

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் ஒரத்தநாடு பொதுப்பணித் துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வள்ளி கொல்லைக்காடு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் காம்பவுண்ட் சுவர் எடுக்கும் பணி நடை பெறுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது 5 அடி ஆழத்தில் பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது .

இது தொடர்பாக தாசில்தாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம், வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் மகரஜோதி,அதிராம்பட்டினம் இன்ஸ் பெக்டர் ஜெயமோகன், சிவன் கோவில் நிர்வாக அதிகாரி சண்முகம் மற்றும் இது தொடர்பான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் நடராஜர் சிலையை ஆய்வு செய்த பார்த்தபோது,சிலை 5 அடி உயரமும் 500 கிலோ எடை இருந்தது. இந்த சிலை பல லட்சம் மதிப்புள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் .

மேலும் சிலைகள் இருக்கும் தடயம் தெரிவதால் பொக்லைன் எந்திரம் கொண்டு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளம் தோண்டி சிலைகள் உள்ளதா என ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இதன் அருகிலுள்ள கிராமமான பழஞ்சூர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட ஐம்பொன் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது. 

இதுபற்றி அதிராம்பட்டினம் சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சண்முகம் கூறியதாவது:-

அதிராம்பட்டினம் சுற்றி அடுத்தடுத்து ஐம்பொன் சிலைகள் கிடைக்கப் பெறுவதால் மேலும் இப்பகுதி அதிவீர ராம பாண்டியன் கோட்டை இப்பகுதியில் இருந்ததால் அதிக அளவில் இது போன்ற ஐம்பொன் சிலைகள் கிடைக்கக் கூடும். எனவே இப்பகுதியை அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து நேற்று இரவு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் அதிராம்பட்டினத்தில் கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலை நடராஜ சிலையை பார்வையிட்டார். மேலும் இது தொடர்பான அதிகாரிகளிடம் விவரத்தை கேட்டறிந்தார்.

பின்னர் கண்டெடுக்கப்பட்ட நடராஜ் சிலையை சிவன் கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News