செய்திகள்
கைது

ராஜபாளையத்தில் விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி குண்டுகள் பதுக்கல் - 2 பேர் கைது

Published On 2019-09-18 06:59 GMT   |   Update On 2019-09-18 06:59 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடி குண்டுகளை பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பல்வேறு வகை வன விலங்குகள் உள்ளன. இவற்றை சிலர் திருட்டுத்தனமாக வேட்டையாடுவதாகவும், அதற்காக நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்துவதாகவும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன் பேரில் ராஜபாளையம் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

புதுப்பட்டி மலைப்பகுதியில் அவர்கள் சென்ற போது சிலர் சந்தேகத்திற்கிடமாக நிற்பதை பார்த்தனர். வனத் துறையினரை கண்டதும் அவர்கள் ஓட்டம் எடுத்தனர். இதில் 2 பேரை வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், வன விலங்குகளை வேட்டையாட காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்தப் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த 5 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்களது பெயர் ராஜபாளையம், சுந்தரராஜபுரம் கணேசன் (வயது 38), சிவராமகிருஷ்ணன் (22) என தெரியவந்தது. தப்பி ஓடிய மேலும் சிலர் பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News