செய்திகள்
வழக்கு பதிவு

கொடிகளை அகற்றிய மாநகராட்சி என்ஜினீயர் மீது தாக்குதல்- ம.தி.மு.க.வினர் மீது வழக்கு

Published On 2019-09-16 07:22 GMT   |   Update On 2019-09-16 07:22 GMT
பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கொடியை அகற்றிய மாநகராட்சி என்ஜினீயரை ம.தி.மு.க.வினர் தாக்கி இருக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை:

நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ம.தி.மு.க. முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது.

இதற்காக அப்பகுதியில் சாலையோரமாக ம.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டிருந்தன. சைதாப்பேட்டை தாடண்டன்நகர் பகுதியில் கட்டப்பட்டிருந்த கொடிகள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் கடும் இடையூறாக இருந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் வரதராஜ் அங்கு ஊழியர்கள் 3 பேருடன் விரைந்து சென்றார்.

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கட்சி கொடிகளை அகற்றும் பணியில் அவர் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மாநாட்டுக்கு பஸ்களில் சென்ற ம.தி.மு.க.வினர் கீழே இறங்கி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் என்ஜினீயர் வரதராஜனுக்கும், ம.தி.மு.க.வினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது வரதராஜ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சைதாப்பேட்டை போலீசார் மண்டல அதிகாரியிடம் புகார் செய்தார். இதன்பேரில் ம.தி.மு.க.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக செயற்பொறியாளர் வரதராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அடையாளம் தெரியாத ம.தி.மு.க.வினர் தன்னை தாக்கியதாக தெரிவித்தார். அவர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளிக்கரணையில் என்ஜினீயர் சுபஸ்ரீ பேனர் விழுந்து பலியான சம்பவத்தைத் தொடர்ந்து ம.தி.மு.க. விழாவில் பேனர் வைக்காமல் தவிர்க்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த கொடியை அகற்றிய மாநகராட்சி என்ஜினீயரை ம.தி.மு.க. வினர் தாக்கி இருக்கும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News