செய்திகள்
மாணவ- மாணவிகள் தங்களது திறமைகளைவெளிப்படுத்தியதை படத்தில் காணலாம்.

பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டிகள்

Published On 2019-08-31 17:46 GMT   |   Update On 2019-08-31 17:46 GMT
பெரம்பலூர் குறுவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் வழங்கப்பட்டது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பெரம்பலூர், குன்னம் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டியினை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு 100, 200, 400, 600 மீட்டர் ஓட்டமும், 80 மீட்டர் தடை ஓட்டமும், 400 மீட்டர் தொடர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய 10 வகையான தடகள போட்டிகள் நடந்தது. 17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு 100, 200, 400, 800, 1,500, 3,000 மீட்டர் ஓட்டமும், தடை ஓட்டமும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளும் நடைபெற்றது.

தடகள போட்டிகளில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தடகள போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், பெரம்பலூர் குறுவட்ட விளையாட்டு போட்டிகளின் செயலாளரும், பெரம்பலூர் அரசினர் தலைமை ஆசிரியருமான சுந்தரராசு மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பெரம்பலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News