செய்திகள்
டாக்டர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த உறவினர்கள்

ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில், பிரசவத்தின் போது குழந்தை உயிரிழப்பு - டாக்டர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

Published On 2019-08-31 15:48 GMT   |   Update On 2019-08-31 15:48 GMT
ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது குழந்தை உயிரிழந்ததற்கு டாக்டர்கள் தான் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தேவீரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ். தொழிலாளி. இவரது மனைவி நீலம்மா. இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் நீலம்மா கர்ப்பமானார். இதையொட்டி அவர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அப்போது நீலம்மாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை இறந்தே பிறந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதன் தலை, நெற்றி பகுதியில் காயங்கள் இருந்ததாகவும் தெரிகிறது. இதைப் பார்த்து நீலம்மாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், அவர்கள் இது குறித்து டாக்டர்களிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குழந்தையின் இறப்புக்கு, பிரசவம் பார்த்த டாக்டர்களும், நர்சுகளுமே காரணம் என்று கூறி குற்றம் சாட்டினார்கள். இது குறித்து தகவல் அறிந்த எம்.எல்.ஏ.க்கள் பிரகாஷ், எஸ்.ஏ.சத்யா ஆகியோர் அங்கு சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் அவர்கள், நீலம்மாவின் உறவினர்களை சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் குழந்தையின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை மருத்துவர் பூபதியிடம் வலியுறுத்தினர். இந்த சம்பவம் காரணமாக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News