செய்திகள்
கோப்பு படம்

மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2019-08-31 12:02 GMT   |   Update On 2019-08-31 12:02 GMT
குன்னூர் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 58). இவர் அந்த பகுதியில் உள்ள நகராட்சி வதை கூடத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த கூடத்தில் தண்ணீர் தொட்டி கிடையாது. எனவே அருகில் உள்ள ஆற்றில் செல்லும் தண்ணீரை மோட்டர் மூலம் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். சம்பவத்தன்று கருப்பசாமி வதை கூடத்திற்கு தண்ணீர் எடுத்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக கருப்பசாமி மின்வயரை மிதித்து விட்டார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் பணியின் போது உயிரிழந்த கருப்பசாமியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரியும், மின்சார வயர்களை மாற்ற கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டி.டி.கே.சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் எம்.ஆர்.சி. மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரி உள்பட சுற்றுப்புற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.

இதுபற்றி அறிந்ததும் குன்னூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News