செய்திகள்
சாலை விபத்து

திருச்சியில் விபத்து- லாரி மோதி ரெயில்வே ஊழியர் பலி

Published On 2019-08-26 11:32 GMT   |   Update On 2019-08-26 11:32 GMT
திருச்சியில் இன்று காலை லாரி மோதி ரெயில்வே ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி கருமண்டபம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரவி (வயது 40). திருச்சி ரெயில்வேயில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு பணிக்கு சென்ற அவர், இன்று காலை பணி முடிந்ததும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். மிளகுபாறை பகுதியில் செல்லும் போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் ஒன்று, பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தது. பஸ்சை முந்தி செல்ல இடம் இல்லாததால் ரவி, பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி நின்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ரவி மீது மோதி, அரசு பஸ்சின் பின்புறமும் மோதியது. இதில் லாரிக்கும் பஸ்சுக்கும் இடையில் சிக்கிய ரவி, சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் திருச்சி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான ரவிக்கு சந்திரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
Tags:    

Similar News