செய்திகள்
சென்னை மாநகராட்சி

சென்னை நகரில் நாய்களுக்கு தடுப்பூசி - மாநகராட்சி தகவல்

Published On 2019-08-17 10:24 GMT   |   Update On 2019-08-17 10:24 GMT
வெறிநாய்கடி பாதிப்பை தடுக்க சென்னை நகரில் உள்ள நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி கமி‌ஷனர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னை மாநகராட்சியில் “வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரம்” என்ற இலக்கினை அடைய தீர்மானிக்கப்பட்டு, பொதுசுகாதாரத்துறை, கால்நடை மருத்துவப்பிரிவின் கீழ் மாபெரும் அளவிலான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் திட்டம் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் திட்டம் மண்டலம் வாரியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இத்திட்டம் மண்டலங்களில் மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரின் மேற்பார்வையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாதவரம் மண்டலத்தில் முதற்கட்டமாக 16.07.19-ந் தேதி முதல் 8 நாட்களுக்கு செயல்படுத்தப்பட்டு 8,846 நாய்களுக்கும், அதன் தொடர்ச்சியாக, ஆலந்தூர் மண்டலத்தில் 30.07.19 முதல் 4 நாட்களுக்கு செயல்படுத்தப்பட்டு 3,474 நாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டது.

தற்பொழுது, அம்பத்தூர் மண்டலத்தில் 13-ந் தேதி முதல் 9 நாட்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து தாங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன் அடைந்துள்ளனர்.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதால் பொதுமக்களிடம் வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இதன்மூலம் வெறிநாய்க்கடி நோயிலிருந்தும், அக, புற ஒட்டுண்ணி தாக்குதலில் இருந்தும், தெருநாய்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இச்சிறப்புத் திட்டத்தினை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News