தொப்பூர் அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் கேபிள் டி.வி. ஆபரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொப்பூர் அருகே வேன்மோதி கேபிள் டி.வி. ஆபரேட்டர் பலி
பதிவு: ஆகஸ்ட் 14, 2019 18:11
விபத்து
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்துள்ள சேசம்பட்டியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது38). கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்.
இவருக்கு குமுதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவர் நேற்று சொந்த வேலையின் காரணமாக வெள்ளைக்கல்லில் இருந்து ஜருகுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கருப்ப நாயக்கன்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பிக்கப்வேன் வேடியப்பன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேடியப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் வேடியப்பனை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு வேடியப்பனை கொண்டுசென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக வேடியப்பன் உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.