செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு பயணம்

Published On 2019-08-11 09:29 GMT   |   Update On 2019-08-11 09:29 GMT
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார்.

சென்னை:

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்க 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னை நந்தம் பாக்கத்தில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வெற்றி கண்டார்.

இந்த மாநாடு மூலம் தமிழ்நாட்டில் 100-க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்கள் தொழில் தொடங்க ஆர்வம் காட்டினர்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அனைத்து வசதி வாயப்புகளும் உள்ளதை அவர்களுக்கு அரசு அதிகாரிகள் விரிவாக எடுத்துத்துரைத்தனர். சாலை வசதி, தண்ணீர், மின்சார வசதிகளும் முழுமையாக செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

அத்துடன் 24 மணி நேரத்துக்குள் விண்ணப்பத்தின் மீது முடிவெடுக்கப்பட்டு அனுமதி அளிக்கும் நடை முறையும் செயல்பாட்டில் உள்ளதாக விளக்கி கூறினார்கள்.

தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் விளங்குவதால், வெளி நாட்டு கம்பெனிகள் பல இங்கு வருகிறது.

இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்ட மிட்டுள்ளார்.

இதற்காக அவர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட 5 நாட்டு தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.

புலம் பெயர்ந்த தமிழ் நாட்டு தொழில் அதிபர்களையும் சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைக்க உள்ளார்.

இதன் மூலம் எரிசக்தி துறை, ஆட்டோ மொபைல் தகவல் தொழில் நுட்பம், மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளில் முதலீடுகள் பெருமளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளும் செல்ல உள்ளனர். இதற்கான சுற்றுப் பயண விவரம் விரிவாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News