செய்திகள்
பாம்பன் பாலத்தில் ரெயில் சென்ற காட்சி (கோப்பு படம்)

சூறாவளி காற்று காரணமாக பாம்பன் பாலத்தில் குறைந்த வேகத்தில் ரெயில்கள் இயக்கம்

Published On 2019-08-08 17:07 GMT   |   Update On 2019-08-08 17:07 GMT
பாம்பன் பகுதியில் சூறாவளி காற்று வீசுவதால், பாம்பன் பாலத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் வழக்கத்தை காட்டிலும் மிக குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டன.
ராமேசுவரம்:

ராமேசுவரம், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில் வங்க கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதை தொடர்ந்து பாம்பனில் உள்ள துறைமுக அலுவலகத்தில் 2–வது நாளாக நேற்றும் 1–வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.

பாம்பன் பகுதியிலும் சூறாவளி காற்று வீசுவதால், பாம்பன் பாலத்தில் செல்லும் அனைத்து ரெயில்களும் வழக்கத்தை காட்டிலும் மிக குறைந்த வேகத்திலேயே இயக்கப்பட்டன.

பலத்த காற்றால் ராமேசுவரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை விரைவு ரெயில் மண்டபத்திலிருந்தே பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக அந்த ரெயில், பயணிகள் யாரும் இல்லாமல் ராமேசுவரத்தில் இருந்த புறப்பட்டு, பாம்பன் பாலத்தில் மிகவும் மெதுவாக ஊர்ந்து வந்து மண்டபம் ரெயில் நிலையத்தை அடைந்தது.

இதேபோல் மதுரையில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்ட ரெயிலும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. அதே நேரத்தில் பகல் 11.20 மணிக்கு ராமேசுவரத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட ரெயிலும், பிற்பகல் 2.10 மணி அளவில் திருச்சிக்கு புறப்பட்ட ரெயிலும் பயணிகளுடனே மிகவும் குறைவான வேகத்தில் பாம்பன் பாலத்தில் ஊர்ந்து கடந்து வந்தன.

கடல் கொந்தளிப்பால் ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 5–வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் 800–க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 800–க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News