செய்திகள்
பஸ் வசதி கேட்டு திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

பஸ் வசதி கேட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

Published On 2019-08-07 17:58 GMT   |   Update On 2019-08-07 17:58 GMT
திருப்பூர் 52-வது வார்டு பகுதியில் பஸ் வசதி கேட்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி 52-வது வார்டுக்கு உட்பட்ட திருக்குமரன் நகர், வள்ளலார் நகர், மூகாம்பிகை நகர், அம்மன் நகர், முத்தையன் நகர், அமராவதி நகர், சிவசக்தி நகர் பகுதியை சேர்ந்த மக்கள், தே.மு.தி.க. இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் நந்தகுமார் தலைமையில் திருப்பூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேற்று காலை வந்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், எங்கள் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. எங்கள் பகுதிக்கு 1-ம் நம்பர் கொண்ட அரசு பஸ் பழைய பஸ் நிலையம் வழியாக அனுப்பர்பாளையம் வரை இயக்கப்பட்டது. மேலும் பூங்கா நகர் முதல் திருக்குமரன் நகர் வழியில் காலை 7 மணிக்கும், மாலை 3 மணிக்கும், இரவு 7 மணிக்கும் மற்றொரு அரசு பஸ் இயக்கப்பட்டது. தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 2 அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பஸ் வசதியில்லாததால் எங்கள் பகுதியில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். தொழிலாளிகள் உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு காலை 8 மணி, 9.30 மணி, மதியம் 1 மணி, மாலை 4.30 மணி, இரவு 8.30 மணிக்கு அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதுபோல் அரசு போக்குவரத்து கழகத்தின் திருப்பூர் கிளை அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கு மனு கொடுத்தனர். அதில் 52-வது வார்டுக்கு உட்பட்ட பூங்காநகர், வஞ்சிநகர், அபிராமிநகர் பகுதியில் தெருவிளக்கு, தார்சாலை வசதி, குப்பை தொட்டி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியை ஏற்படுத்த வேண்டும். திருக்குமரன் நகர் அங்கன்வாடி மையத்துக்கு சுற்றுச்சுவர் மற்றும் சாக்கடை கால்வாய் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Tags:    

Similar News