செய்திகள்
சதுரகிரி மலையில் பக்தர்கள்

சதுரகிரியில் மலையேற தடை: வனத்துறையினருடன் பக்தர்கள் வாக்குவாதம்

Published On 2019-08-03 06:14 GMT   |   Update On 2019-08-03 06:14 GMT
சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள் வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் நடத்தினர்.
பேரையூர்:

மதுரை-விருதுநகர் மாவட்ட எல்லையான சாப்டூர் அருகே உள்ள சதுரகிரி மலைமேல் பிரசித்தி பெற்ற சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. கோவில் உள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி ஆகும். இதனால் மாதத்தில் பிரதோ‌ஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

ஆடி அமாவாசையை யொட்டி கடந்த மாதம் 27-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அப்போது மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 4 பக்தர்கள் பலியாகினர். 1-ந் தேதிக்கு பிறகு மலையேற வனத்துறை அனுமதி தரவில்லை.

இந்த நிலையில் இன்று ஆடி பெருக்கையொட்டி மதுரை, விருதுநகர், திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் சதுரகிரிக்கு வந்தனர்.

அவர்களுக்கு மலையேற வனத்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால் பக்தர்கள் தாணிப்பாறையில் வெகுநேரம் காத்திருந்தனர். நேரம் ஆக.. ஆக... பக்தர்கள் கூட்டம் அதிகமானது. ஆனால் வனத்துறை அதிகாரிகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருதி சதுரகிரி மலையேற அனுமதி தர முடியாது என கண்டிப்புடன் தெரிவித்து விட்டனர். இதனால் பக்தர்களுக்கும், வனத்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பக்தர்கள் அடிவாரம் வழியாக சென்ற மினிபஸ்சை மறித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையை கண்டித்து கோ‌ஷமிட்டனர். விசே‌ஷ நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களை மலையேற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags:    

Similar News