செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 9 ஆயிரம் கனஅடியாக சரிவு

Published On 2019-08-01 08:19 GMT   |   Update On 2019-08-01 08:19 GMT
கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டதால் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று சரிந்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
தர்மபுரி:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து கடந்த மாதம் 17-ந் தேதி தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று 2 அணைகளில் இருந்தும் 11 ஆயிரத்து 619 கன அடி தண்ணீர் திறந்து விட ப்பட்டது. இன்று 2 அணைகளில் இருந்து 8,332 கனஅடியாக குறைத்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த தண்ணீர் பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்தது. ஒகேனக்கலில் நேற்று 10 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் வந்தது.

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அளவு குறைக்கப்பட்டதால் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சற்று சரிந்து 9 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

தொடர்ந்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வருவதால் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் 10-வது நாளாக இன்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர்வரத்து வருவதால் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீர் வரத்தை கண்காணித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் நேராக மேட்டூருக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று 9 ஆயிரத்து 200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 9 ஆயிரத்து 935 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரு நாளைக்கு ஒரு அடிக்கும் மேல் உயர்ந்து வருகிறது.

கடந்த 23-ந் தேதி 39.13 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 47.67 அடியாக இருந்தது. இன்று மேலும் ஒரு அடி உயர்ந்து 48.92 அடியானது. பிற்பகல் 49 அடியை தாண்டியது. இதனால் கடந்த 9 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர் மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags:    

Similar News